Tuesday 18 September 2018

வயலூருக்கு

வாருங்கள் #வயலூருக்கு வளமும் நலமும் வாரிகொடுக்கும் வள்ளல் வயலூரன்
#அருணகிரியாருக்கு அருள் தந்த வயலூர் முருகன் வாசித்து மகிழுங்கள் உறவே ......

திருச்சி மாவட்டம் குமாரவயலூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒரு புராண வரலாறு கூறும் பழமையான திருத்தலம் ஆகும்.
இத்தலத்தில் தான் அருணகிரிநாதருக்கு இறைவன் திருப்புகழ் பாடக்கூடிய ஆற்றலையும் அறிவையும் அருள்புரிந்தார் எனக் கூறப்படுகிறது.
அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தனது வேலால் எழுதி கவிபாடும் ஆற்றலைத் தந்தார். இத்தலம் முருக பெருமான் தலமாக இருந்தாலும், சன்னிதானத்தில் மூலஸ்தானத்தில் ஆதிநாதராக சிவபெருமான் இருக்கிறார்.
அவருக்கு பின்புறமே முருகபெருமான் வள்ளி தேவசேனாவுடன் காட்சி தருகின்றார். தந்தைக்கு பிரணவ மந்திரத்தைப் போதித்தவர் என்றாலும், தந்தையை மாணவனாக ஆக்கிய தோஷப் பரிகாரத்திற்கு,
இங்கு தான், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த கோவில் சன்னிதானம் அமைந்துள்ளது. வயல்கள் சூழ்ந்ததால் – வயலூர் எனவும், குமரனாக இருப்பதால் –குமார வயலூர் எனவும், ஆதிநாதர் தோன்றியதால் –ஆதிகுமார வயலூர் எனவும் பெயர் ஏற்பட்டது. பின்னர் குமார வயலூர் ஆனது.
இந்த தல வரலாறு பற்றிய புராண நிகழ்வு என்னவெனில், சோழமன்னன் ஒருவன் இங்கு தன்பரிவாங்களோடு வேட்டையாட வந்தார்.
தாகம் எடுக்கவே தண்ணீர் தேடி அலைந்தான். இங்கு கரும்பு ஒன்று மூன்று கிளைகளுடன் இருக்கவே, அதை ஒடித்து சாற்றை அருந்தி தாகம் தீர்க்க எண்ணினார். ஒடித்தவுடன் அந்த கரும்பிலிருந்து ரத்தம் கசியவே, அந்த இடத்தை தோண்டினார். அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கவே அதை எடுத்து இங்கு பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.
அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தன் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது, காப்பாற்றி முத்தைத்திரு என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா! என்று அசரீரி குரல் கொடுத்தார்.
மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலம் வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர் தோன்றி அசரீரி உண்மையே என்று கூறி சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி அருளினார்.
அருணகிரிநாதருக்குகாக தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய பின்னர், அருணகிரி நாதருக்கு குஷ்டநோய் பூரணமாககுணம் ஆனது. அவரது நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னரே, அருணகிரிநாதர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார்.
இத்தல முருகனைப் போற்றி 18 பாடல்கள் பாடினார். அவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றிலும், அருள்கொடுத்த வயலூர் முருகா என்று கூறியிருப்பது இதன் உண்மையை உணர்த்துகிறது.
இங்கு சன்னிதானத்தில் முருகபெருமான் சிவபெருமானின் பின்னர் வள்ளி தேவசேனாவுடன் குமரனாக காட்சி தருவதால், இங்கு வந்து வழிபட்டார் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் என்பதும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நீங்கப் பெறுவர் என்பதும் இத்தலத்தின் விஷேசம்.
கவிபாடும் திறமை :
தைப்பூசத்தன்று, அருகிலுள்ள 4 கோவில் சுவாமிகளும் ஒன்று சேர்ந்து பஞ்சமூர்த்திகளாக காட்சி தருவர். அருணகிரியாருக்கு திருப்புகழ் பாட அருள் வழங்கிய முருகதலம் என்பதால், எழுத்துத்துறையை மேற்கொண்டவர்களும், கவிபாடும் திறமையை வளர்த்துக் கொள்பவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அந்தந்த கலையில் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒருமுறை 1934–ம் ஆண்டு இத்தலம் வந்து கிருபானந்தவாரியார் வழிபட்டு சென்றார். அப்போது அர்ச்சகராக இருந்த கம்புநாத சிவாச்சாரியார் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியார் 50 பைசாவை காணிக்கை இட்டு சென்றார். அன்று கோவில் நிர்வாகி கனவில், 50 பைசாவை வைத்து கோபுரம் கட்ட இயலுமா என்று ஒரு சன்யாசி கேட்டவுடன், மறுநாள் அந்த 50 பைசாவை வாரியார் சுவாமிகளுக்கு திரும்ப அனுப்பி விட்டனர். அதைப் பெற்று விபரம் தெரிந்து கொண்ட கிருபானந்தாவாரியார், இத்தலத்தின் அருமையை அறிந்து கோபுரம் அமைத்து கும்பாபிஷேகத்திற்கும் வழி செய்தார். அதன் பின்னர் தான் அவருக்கு தமிழ் முழக்கம் செய்ய அருள்புரிந்ததாக கூறினார். ஒவ்வொரு சொற்பொழிவையும் ஆரம்பிக்கும் முன்பு, நான் அன்றாடம் வழிபடும் வயலூர் முருகன் திருவடிகளைப் பணிந்து வணங்கி இந்த இறை பணியை துவங்குகிறேன் என்று முன்னுரை வழங்குவார். அந்த அளவுக்கு அவர் இந்த இறைவன் மீது பக்தியும், பாசம் கொண்டு பிணைக்கப்பட்டு இருந்தார்.
மேலும் சில அபூர்வமான நடராஜர் சிலையையும் இங்கு காணமுடிகிறது. அனைத்து கோவில்களிலும் நடராஜர் ஆடிய கோலத்திலேயே காலைத் தூக்கி வைத்தபடிதான் காணமுடியும். இங்கு இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடி முடியப்பட்டும், கால்களின் கீழே முயலகன் இல்லாத, ஆரம்ப நிலையில், சதுர தாண்டவ நடராஜர் என்ற நாமத்துடன் காணப்படுவதும் சிறப்பு. இவருக்கு மார்கழி மாதம், திருவாதிரைத் திருநாள் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்கு விநாயகர் பொய்யா கணபதி விசேஷ மூர்த்தியாகவும் காட்சி தருகிறார். அருணகிரி நாதர் இவரைப் பற்றி திருப்புகழில் யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவுக்கு பொய்யா கணபதி சீராய் அருள் தருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தலம் சிவபெருமான் தலமாக இருப்பினும், முருகனுக்கே முக்கியத்துவம் தரும் தலம் ஆகும். முருகனின் வாகனமான தேவமயில் இங்கு வடக்கு பக்கம் நோக்கி உள்ளது. ஆதி நாயகி என்ற பெயரில் அன்னை பார்வதி தெற்கு பார்த்து அபூர்வமாக இருக்கிறார். மற்ற தலங்களில் முருக பெருமான் தாய் தந்தையரை தனித்து நின்றே பூஜை செய்வார். இத்தலத்தில் முருகன் வள்ளி, தெய்வவானையுடன் சேர்ந்து இருந்து பூஜை செய்வதால் தனி சிறப்பு வாய்ந்தது என்கின்றனர்.
பிரார்த்தனை தலங்களில் இது மேன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாக சர்ப்ப தோஷம் உள்ளோர் செவ்வாய் அன்று சக்தி குளத்தில் நீராடி, முருகனை தரிசிக்க தோஷம் நீங்கி, நோய் நொடியற்ற நீண்ட ஆயுள், செல்வ அபிவிருத்தி, விவசாய செழிப்பு பெறலாம்.
சிவதலங்களில் நடைபெறும் அனைத்து விசேஷ நாட்களிலும் மற்ற கந்தசஷ்டி விரதம், கார்த்திகை ஆகிய அனைத்து நாட்களிலும் விஷேச பூஜைகள் உண்டு. இங்கு 6 கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில் திறந்து இருக்கும். திருச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் உள்ளது

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...