Thursday 3 January 2019

சிந்தனை சோலையில் மலர்ந்த மலர்கள் "அச்சம் தவிர்"

💐 சிந்தனை சோலையில் மலர்ந்த மலர்கள் 💐
🏇 "அச்சம் தவிர்" 🏇
🔖 சமுதாயம் எப்போதும் தன் பயங்களை உன் மீது திணித்து உன்னையும் பயத்தில் ஆழ்த்தத் தயாராய் உள்ளது
...
சமுதாயத்திடம் உன் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கேட்காதே
நீ யாரிடம் கேட்கிறாயோ, அவன் தன் அனுபவத்தின் அடிப்படையில் தீர்வு சொல்லுவான்
அது உன் வாழ்க்கைக்குப் பொருந்தாது
நீ பிரத்யேகமானவன்
உன் பிரச்சனைகளும் பிரத்யேகமானவை
அவைகளுக்கான தீர்வை உன்னால் மட்டுமே தர இயலும்
அறிவியல் ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்
அவை பொதுவானவை
உதாரணமாய் நீரை 100 டிகிரி கொதிக்க வைத்தால் என்ன ஆகும் போன்ற
அறிவியல் சார்ந்த விசயங்களை சமுதாயத்திடம் இருந்து நீ தெரிந்துகொள்ளலாம்
ஆனால் உன் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகள் பிரத்யேகமானவை
“என்ன செய்துட்டு இருக்குறீங்க...???”
பொதுவாக சமுதாயம் நமைப் பார்த்துக் கேட்கும் கேள்வி
“சமுதாயப்பணி" - பதில்
உடனே
“அதில் என்ன வருமானம் வரும்...???
உங்கள் பிழைப்புக்கு, சர்வைவலுக்கு (Survival) என்ன செய்கிறீர்கள்...???
உங்களுக்கு வேறு வருமானம் வருகிறதா....???
வட்டிக்கு விட்டிருக்கிறீர்களா....???
வீடு அல்லது ஏதாவது கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா...???
எப்படி சமாளிக்கிறீர்கள்...???
இப்போது எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம்
பின்னாளில் என்ன செய்வீர்கள்....???
வயசான காலத்துல நாலு காசு இருந்தாதானே நாலு பேரு மதிப்பான்
தயவு செய்து இந்த பொதுப்பணியையெல்லாம் விட்டுட்டு நாலு காசு சம்பாதிக்கப் பாருங்க
உங்க மேல இருக்கற அக்கறைலதான் நான் சொல்றேன்”
என ஒரு பேருரையே நிகழ்த்தும்
இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பயம்
சமுதாயத்தித்தின் பதட்டமயமான வாழ்க்கைக்கு இந்த பயம்தான் காரணம்
இந்த பயம்தான் அவர்கள் வாழ்க்கையை இயந்திரமயமாக மாற்றிவிட்டது
இந்த பயம்தான் அவர்கள் வாழ்வை வாழாமல் தொலைத்து விட்டதற்கான முழு முதற் காரணி
இந்த பயமற்று இருப்பவன்
அவர்களைப் பொறுத்தவரையில் ஆபத்தானவன்
அவன் சுயமாய் சிந்திப்பவன்
அவன் அடக்குமுறைகளுக்குப் பணியமாட்டான்
அவன் பணத்திற்கு விலைபோக மாட்டான்
கபட வேடங்களை தோலுரித்துக்காட்டுவான்
தந்திரங்களால் அவனை வெல்ல முடியாது
அவனை புகழ்ந்துரைத்து காரியங்கள் சாதித்துக் கொள்ள முடியாது
பிறரின் புகழ்ச்சி என்பது அடிமுட்டாள்தனமானது என்பதை தெளிவாகத் தெரிந்தவன் அவன்
எனவே இந்த பயத்தை எப்படியாவது அவனுக்குள் திணிக்க வேண்டும் என
ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து முயற்சி மேற்கொள்ளும்
“நீ எவ்வளவு திறமை படைத்தவன்
உன் அத்தனை திறமைகளும் வீணாகிக் கொண்டிருக்கின்றன
நீ ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்...???
சிறிதே சிறிது சமுதாயத்துடன் ஒத்துப்போனால்
நீ ராஜ வாழ்க்கை வாழலாம்
ஒரு திறமையும் இல்லாதவன் எல்லாம் ஓகோ வென வாழ்கிறான்
உனக்கென்ன கொறச்சல்” என ஆசை காட்டும்
அதற்கு செவிசாய்க்காதபோது விதவிதமாய் பயமுறுத்தும்
ஒதுக்கி வைக்கும்
பல்வேறு இன்னல்களைத் தரும்
ஆனால் மனம் கடந்து சென்றுவிட்டவன் ஒட்டு மொத்த உலகமே எதிர்த்து நின்றாலும் சலனப்பட மாட்டான்
எதற்கு இந்த பயம்...???
இந்த பயம் தேவையற்றது
எனக்குத் தெரிந்து
“நான் மிகப்பெரிய பக்திமான்
வருடந்தவறாமல் ஐயப்பனுக்கு மாலை போடுவேன்
திருப்பதி செல்வேன்
கோயில்களுக்கு என்னால் ஆன கைங்கர்யங்களைச் செய்வேன்
இரண்டு வேளை குளிப்பேன்
நாள்தவறாமல் சிவன் கோயில் செல்வேன்”
எனச் சொல்லும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவன் கூட
இந்த பயத்தினால் பீடிக்கப்பட்டு
பொருள் தேடும் முயற்சியில்
அது தந்த பதட்டத்தில் பலருக்கும் துன்பம் கொடுத்து
ஏமாற்றி, தந்திரம் செய்து அப்பொருளைச் சம்பாதிக்கிறான்
உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவன் செய்யும் செயலா இது....???
தன் தேவைகளை இறை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை இல்லாததனால்தானே
இப்படித் தந்திரங்களாலும், சூழ்ச்சியினாலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே செல்கிறான்
பின் எதற்காக தன்னை இறை நம்பிக்கையுள்ளவன் என பறைசாற்றிக் கொள்கிறான் என்பது புரியாத புதிராகவே உள்ளது
இதைவிட கடவுளை மறுக்கும் நாத்திகனே ஒரு படி மேல் அல்லவா...???
ஆகவே பயத்தை விட்டொழி
அது உன்னை வாழவிடாது
தன்னையுணர்ந்த சுதந்திர வாழ்க்கைக்காய் ஏக்கம் கொள்
ஆழந்த தாகம் கொள்
தவிப்புக் கொள்
பிரபஞ்ச சக்தி அதற்கான சூழ்நிலைகளை உனக்கு ஏற்படுத்தித் தரும்
முழுமையான விழிப்புணர்வில் அகங்காரத்தை கரைத்து விடும் போதுதான்
உன் வாழ்க்கை உண்மையில் ஆரம்பமாகிறது
அதுவே உன் உண்மையான பிறந்த நாள்
“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பதில்லை”
பயத்தை ஒழிக்க அருமையான சிந்தனை
உண்மை
இந்த நிலையை எய்தாமல் உணர்வு பெற முடியாது
பயம் என்கிற ஒரு உணர்வு கடந்து செல்லக்கூடிய உணர்வாகத்தான்
இருக்கலாமே தவிர
ஒழிக்ககூடிய உணர்வாக இருக்கக்கூடாது
ஏனென்றால்
நம்முடைய ஒவ்வொரு தைரியமான
எண்ணங்களுக்கும் பயம்தான் காரணமாக இருக்கும்
பயம் மட்டுமல்ல எந்த ஒரு
உணர்வையும் ஒழிக்காமல்
கடந்து செல்வது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து
மாற்று கருத்து இருப்பின் பகிரவும்
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
ஒன்று மற்றொன்றாக மாறுகிறது
இது உணர்வுக்கும் பொருந்தும்
இங்கு ஒழிப்பது என்பது பல முறை பயத்தை கடந்து சென்று அதை முழுமையாக உணர்ந்து
மீண்டும் அந்த உணர்வு தேவையே இல்லாதை ஒழித்தல் எனலாம்
உடலை நிலைக்கச்செய்தால் உடலைக் கடக்கலாம்
மனதை நிலைக்கச்செய்தால் மனதையும் கடக்கலாம்.ல்
கவலை ஒழித்தல்...???
எதில் எதன் மீது நிலைக்கச் செய்வது...???
எந்த ஒரு உணர்வையும் ஒழிக்க வேண்டாம் எனில்
கவலை எனும் உணர்வை ஓழிக்க வேண்டும் என மகரிஷி கூறியது ஏன்...???
இன்ப துன்ப உணர்வை கடந்த ஞானிகள் கூட நமது அறியாமையை கண்டு கவலை
கொண்டிருந்தார்கள்
நமது மகரிஷிக்கு கூட நமது நிலை கவலை அளித்திருக்கலாம்
உடலும் மனமும் தனித்த இரண்டான அம்சங்கள் இல்லை
ஒன்றின் நீட்சியே மற்றது
Mind is an extension of body
மனதும் உடலும் ஒன்றையொன்று சார்ந்து
உடலை நிலைத்தாலே மனது தானாக நிலைப்பதற்கேதுவாகிறது
ஒழித்தலுக்கான பொருளை மேலே கண்டு விளங்கலாமே
விவாதம் வேண்டாமே
விவாதம் = வீன் + வாதம்
மன்னிக்கவும்
விவாதம் தேவையில்லைதான் ஒப்புக்கொள்கிறேன்
சிந்தனையை தொடர்வோம்
பாரதி கவிதைகள்: "சென்றது மீளாது"
சென்றதினி மீளாது மூடரே
நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்,
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று
நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமைஎலாம் அழிந்துபோம், திரும்பி வாரா"
பயம் எப்போது வருகிறது....???
தன் மீதும், தன் செயல்திறன் மீதும் நம்பிக்கை இல்லாதிருக்கும் போது வரும்
பிறர் கூறுவதை சிந்திக்காமல், அப்படியே ஏற்கும் போதும் வரும்
பிறர் கூறுவதை ஆழ்ந்து சிந்திக்காமல்,
அகன்று சிந்திக்கும் போது குழப்பம் ஏற்படும் நிலையிலும் வரும்
"நான் யார்" என்ற தெளிவு இல்லாத போதும் வரும்
சமுதாயத்தால் எங்கெ நம் முகமூடிகள் கழற்றப்பட்டு விடுமோ என்று எண்ணும் போதும் வரும்
நோய், மரணம் இவற்றை அறியாதிருக்கும் போது வருவதை விட
அதன் நுணுக்கங்களை அறிந்து கொண்ட பிறகு அதிக பயம் வரும்
ஆக, எல்லா சூழ்நிலைகளும் நம்மை பயம் என்ற பாதாளத்தில் தள்ளி விடுவதற்கு தயாராக இருக்கிறது
இதை எப்படி வெல்வது....???
எதுவும் என்னுடையது அல்ல
ஆகையால் எதுவும் என்னை பாதிக்காது
என்ற திண்ணிய எண்ணம் பயத்தை பயந்து ஓடச் செய்யும்
சமுதாயப் பார்வையில் பயம் இல்லாத மனிதன் எதற்கும் பயன் பட மாட்டான் என்ற முத்திரை இருக்கு
அந்த முத்திரையையும் நம் முகத் திரையாக கொள்ளாமல்
தூக்கி எறிய துணிவு இருந்தால்
பயத்தை வெல்லலாம்
பயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட,
நேருக்கு நேர் சந்திக்க துணிந்தால் தானாகவே ஒழிந்து போகும் கடந்தும் போகும்
ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போது
கடுமைத் தனம் கை கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்
கடக்க வேண்டும் என்று எண்ணும் போது
இங்கேயும் பயம் கவ்விக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்
அதை சந்திக்க வேண்டும் என்ற துணிவே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை குடுக்கும்
பக்குவம் வந்துவிட்டால் எல்லாம் சாத்தியமாகும்ந்
மகரிஷி ஏன் "கவலை ஒழித்தல்" என்று பெயர் சூட்டி இருக்கிறார் என்றால்
கவலையின் தன்மை மிக மிக மோசமான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதால் தான்
மேலும் ஒழிப்பதற்கு ஆயுதமாக சிந்திக்கக் கூடிய வழிமுறையும்
அதை சந்திக்கக் கூடிய ஆற்றலையும் தானே கூறி இருக்கிறார்
சந்தித்து, சிந்தித்தாலோ,
அல்லது,
சிந்தித்து சந்தித்தாலோ, தானே ஓடிவிடும்
ஒழிப்பதும், கடப்பதும் தானாய் நிகழும்
மாற்றுக் கருத்து இருப்பினும் பகிரலாம்
ஒருவர் கூறிய கருத்தின் மீது சரியா, தவறா என்று விவாதம் வேண்டாம்
அவரவர் தன் இயல்பை கொண்டே பதிலை சொல்கிறார்
விவாதம் வீன் புன்படுத்துதலை ஏற்படுத்தலாம்
பயத்தை ஒழிக்க வேண்டும் என்ற கட்டாயமே இல்லை
பயமும் ஒரு அவசியமே
தன்னுடைய வேலையில் சரியாக செய்ய வேண்டும் என்ற பயம் வந்தால் தான் பாதுகாப்பு கொடுக்கும்
கடந்து போகுதல் என்பது மனதின் அலை வேகத்தை நுண்மை ஆக்குகிறது
இன்பத்தையும், துன்பத்தையும் இரெண்டையும் கடந்து போவது
பயம் ஆபத்தானது என்று எதிர்க்காமல்
அதையும் கடந்து போவது
ஒரு கருத்தை ஒருவர் பகிரும் போது
அது நமக்கு பொருந்தி வந்தால் ஏற்றுக் கொள்லாம்
இல்லையேல் விட்டுவிடலாம்
ஏனெனில்
ஒவ்வொருவர் கருத்தின் தளம் மற்றவர்களுக்கு மாறுபடாக இருக்கும்போது அதை விட்டுவிடலாம்
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களுக்கு உயர்வு மனப்பான்மைக்கு உரிய கருத்துக்களை கூறும் போது அது மிகவும் பயன்படும்
ஒரு கருத்தே எல்லா மனிதனுடைய தளத்திற்கும் பயன்படும் என்று சொல்ல முடியாது
அச்சம் தவிர்
நல்ல சிந்தனை தான் என்றாலும்
அச்சம் இல்லையானால் நமக்கு வளர்ச்சி இல்லை
அச்சம் என்பது அடிப்படையான விஷயம்
இன்று ஏன் நாம் சமுதாயம் என்ற குழுவாக இருக்கிறோம்...???
"அச்சமும் அன்பும் மனிதனை ஒருங்கிணைக்கக் கூடிய உணர்வுகள்" -
இது உளவியல் கூற்று
பயம் இருப்பதினால் தான் மனிதன் சேர்த்து வாழ்கிறான்
அனைத்து உயிர்களும் சேர்ந்து வாழ்கிறது
அப்போ, மனித தொகுதிக்கு,
சமுதாய தொகுத்திக்கு அடிப்படையாக இருப்பதே அச்சம் தான்
பயத்தில் இரெண்டு வகை உண்டு
தேவைக்கு பயப்படுதல்
தேவை இல்லாதவற்றுக்கு பயப்படுதல்
பயத்தில் தேவையான பயம் நல்வழிப் படுத்தும்
தேவையில்லாத பயம் துயரத்தில் ஆழ்த்தும்
சரி
அச்சத்தை ஒழிக்க வேண்டுமா....???
ஒழிக்க வேண்டும் என்று இறங்கினால் மன நிலை பாதிப்பு வரும்
ஏனெனில்
இந்த உணர்வுகள் அனைத்தும் நம்முடைய கருமையத்தில் பிறவித் தொடராக வருகின்ற உணர்வுகள்
மனதை இரெண்டு வகையாக பிரித்து செயல் படலாம்
ஒன்று அனிச்சையாக இயங்கும் பகுதி
மற்றொன்று தன்னிச்சையாக இயங்கும் பகுதி
தன்னிச்சையாக இயங்கும் பகுதியில் நாம் செயல்படுத்தலாம்
அனிச்சையாக இயங்கும் பகுதியை புரிந்து கொள்ளலாம்
இது சூழ்நிலையைப் பொறுத்து இயங்கக்கூடிய பகுதி
எதிராக செயல்படும் போது அச்சமே உயிர் பெற்று அதிகமாகும்
வாதத்தை விட அனுபவப் பூர்வமாக பார்க்க வேண்டும்
அச்சம் நமக்கு இருக்கிறதா....???
எதை நாம் உணர்கிறோமோ,
அது வெளியில் இருக்கிறது.
அச்சம் வெளியில் இருப்பதால்,
நான் அச்சம் இல்லை,
அச்சம் எனக்குள் இல்லாத போது ஏன் பயப்பட வேண்டும்....???
பயத்தை அலட்சியம் செய்தால் தானாகவே போய்விடும்.
இது தான் கடந்து செல்லுதல்.
நம்மை மீறி வருவதை நாம் கடந்து செல்ல முடியும்.
ஒன்றே ஒன்று.
நாம் சீண்டாமல் இருக்க வேண்டும்.
அச்சம் பாதுகாப்பை தருவதால் அச்சம் அவசியம் தான்.
எந்த ஒன்றையும் எற்றுக் கொள்ளும் போது எதிர்க்க மாட்டோம்.
எதிர்க்காமல் இருக்கும் போது,
அதுவே உயிரற்று போய்விடும்.
மகரிஷி கூறிய கவலை ஒழித்தல் -
என்றைக்குமே மகரிஷியை அளவிட்டு பார்க்க முடியாது
நாம் இன்னும் அவர் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவே இல்லை
"எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தால் நிலைக்கச் செய்தால்
எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்"
என்று தானே கூறி இருக்கிறார்
எந்த இடத்திலும் எதிர்க்க சொல்லவே இல்லையே
கவலை ஒழித்தல் பயிற்சி முறை என்பது நமக்கு அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்த தான்
அதை புரிந்து கொண்டால் கவலை என்பது இயல்பாகவே நம்மை விட்டு போய்விடும்
நமக்காக நம் நிலைக்கு இறங்கி வந்து பாடம் சொல்லி இருக்கிறார் மகரிஷி
எண்ணமோ, கவலையோ, அச்சமோ, எதுவாக இருப்பினும்
அதனுடைய இயல்பையும், இருப்பயும் புரிந்து கொண்டால்
தானாக தெளிந்து விடும்
நம்மை கடந்து விடும்
அகத்தாய்வு என்பது எண்ணங்களோடு சண்டை போடுவதல்ல
மாறாக
அதன் இருப்பையும், இயல்பையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை
"சும்மா இருத்தல் பயிற்சி முறை -
தன்னிச்சையாக மனம் செயல்படும் போது நாம் சிந்திப்பவனாக இருக்கிறோம்
அனிச்சையாக வருவது சூழ்நிலையைப் பொறுத்து வரக்கூடிய உணர்வுகள்
வரக்கூடிய எண்ணத்தினோடோ உணர்வினனோடோ பந்தப் படாமல்
அதனோடு சேராமல், அங்கீரிக்காமல், இருப்பது தான் நிலையான விழிப்புநிலை, அயரா விழிப்பு
நாம் அசந்து விட்டால், அந்த எண்ணமே நாமாகி விடுவோம்
உணர்வே நாமாகி விடுவோம்
அப்போ அசராமல் சும்மா இருந்தாலே போதும்
அதுவாக தானே போய்விடும்
இதைத் தான் மகரிஷி constant awareness என்றார்.
J.K. Choiceless awareness என்றார்
Paul sen வெறுமனே இருத்தல் என்றார்
புத்தர் பிரக்கிய நிலை என்றார்
ஓஷோ விடுதல் என்றார்
ஆக,
இங்கு சொல்லப்படுவது அனைத்தும் எண்ணங்களில் இருந்து விழிப்பை பெறுதல்
ஒரு எண்ணத்தை நாம் உணர்கிறோம் என்று சொன்னால்,
எண்ணம் நாம் அல்ல என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
நம்மால் உணரப் படும் எதுவும் நாம் அல்ல
ஆக,
எந்தவொரு எண்ணமோ, உணர்வுகளோ நாம் இல்லாத போது நாம் ஏன் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.....???
இங்கு தான் விழிப்புணர்வு வருகிறது.
இந்த நிலை கைகூடினால் எப்போதும்
" சும்மா" இருக்க முடியும்
எப்போதும் அகத்தாய்விலேயே இருக்கலாம்
எதனோடும் எதிர்த்து போராட வேண்டிய அவசியம் இல்லை
தானாக வந்து தானாகவே போய்விடும்
ஆரம்ப சாதகர்களுக்கு அச்சம் தவிர் கருத்து சொன்னால் தான் அவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள்
இதுவும் நான் என்ற உணர்வுக்கு வலிமை கொடுப்பதா தான் அர்த்தம்
சும்மா இருக்கக்கூடிய பயிற்சி என்னவென்றால்
கேட்டுக்கும் "நான்" என்ற உணர்வை கைவிடுவது
தியானம் செய்யும் நானை விட்டுவிடுவது
சிந்திக்கும் நானை அப்படியே விட்டுவிடுவது
கேள்வி கேட்ப்பது நானல்ல,
பதில் கூறுவது நானல்ல,
இருப்புணர்வு நானல்ல,
இந்த சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட நாமாக உருவாக்கிக் கொண்ட நான் தான்
ஒரு மனிதன் இன்னும் நேரடியாக வேறொரு மனிதனை தொடர்பு கொள்ளவே இல்லை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகமூடிகள் அணிந்து தான் இருக்கிறார்கள்
முகமூடிகளைப் பார்த்தே ஒருவர் நல்லவர் என்றும், தீயவர் என்றும் முடிவு செய்கிறோம்
இந்த முகமூடிகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக நின்று பார்க்கும் போது தான் நிதர்சனம் புரியும்
இதற்கு தான் அகத்தாய்வு
அக விழிப்பை ஏற்படுத்தி,
செயல்படுபவன் என்ற கட்டத்தில் இருந்து கவனிப்பவன் என்ற கட்டத்திற்கு நகர்ந்து செல்வது தான் அகத்தாய்வு
பிளவு பட்ட தன்மையில் இருந்து ஒருமை பாட்டு நிலைக்கு கொண்டு வருவது அகத்தாய்வு
ஏற்புத்திறனை கொடுத்து மேன்மை படுத்துவதே அகத்தாய்வு
வாழ்க வளமுடன்
அச்சம் தவிர் என்பதன் உச்ச நிலை -
தனித்து நிற்கும் உணர்வின் நிலை அது
சமூகம் முழுவதும் வேறொரு அலை இயக்கத்திலும்,
வேறொரு நிலைபாட்டிலும் இயங்கிக் கொண்டு இருக்கிறது
இன்னும் சொல்லப்போனால், பொம்மலாட்டக்காரன் போல ஒரு மையம் இருக்கிறது
அந்த மையத்தை வைத்துக் கொண்டு அதன் படியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது
மையமே இல்லாமல் ஒட்டுமொத்த தெய்வீக நீதியோடும்,
தெய்வீக அறிவோடும் பொருந்திய ஒருவன் தன்னை இழந்துவிட்ட ஒருவனுக்கு அச்சம் என்பது இல்லவே இல்லை
அப்படி ஒரு உணர்வு தளமும் செயல்படாது
அடிப்படையில் தனித்து நிற்கக்கூடிய நிலை எப்போது வரும் என்றால்
தன்னை இழந்த நிலையில் மட்டுமே சாத்தியப்படும்
இது அக நிலையில் இருந்தால் போதும்
இதை வெளிப்படுத்தி விளம்பரம் தேட ஒன்றும் இல்லை
ஆனால், நிஜமாலுமே நிலைவை துரத்தி
நீரை நீரால் கழுவி வாழும்
இந்த மானுட சமூகத்தை நினைத்தால்
சிரிக்கத் தான் தோன்றுகிறது 🔖
அச்சத்தின் ஆய்வுக் கூடத்தில் : உள் முக பயணம்

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...